Saturday, June 6, 2009


Wednesday, February 25, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் - எனது பார்வையில்

அங்கிங்கெனாதபடி எங்கும் பரபரப்பு விஷயமாகியிருக்கும் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இந்த வார இறுதியில் தான் பார்த்தேன்.
சேரியில் வளரும் ஒரு முஸ்லீம் சிறுவன் எப்படி கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறான் எனும் முடிச்சுடன் படம் ஆரம்பிக்கும் போது ஏதோ ஒர் அறிவு ஜீவியின் கதையைச் சொல்லப்போகிறார்கள் என சகஜமாக அமர்ந்தால் மனதுக்குள் ஓராயிரம் ஈட்டிகளைப் பாய்ச்சுவது போல காட்சிகளை நகர்த்துகிறார்கள் இயக்குனரும் கதாசிரியரும்.

எங்கே இருக்கிறாள் என்று தெரியாத தனது காதலி இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள் என்னும் ஒரு நம்பிக்கை இழையில் மில்லியனயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கதையின் நாயகன், கால் செண்டர் நிறுவனத்தில் “டீ” பையன்.

விஷயம் எதுவும் தெரியாது அவனுக்கு. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் சந்தித்த மனிதர்கள், அல்லது கேட்ட தகவல்கள், பார்த்த அனுபவங்கள் இவற்றின் வெளிச்சமே. ஆனால் மிகவும் கூர்மையான அறிவு அவனுக்கு. எப்போது போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சியில் இடம் பிடிக்கலாம் என்பது உட்பட.

ஆயிரம் ரூபாய் நோட்டில் காந்தித் தாத்தா இருக்கிறார் என்பது தெரியாத சிறுவனுக்கு நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரிகிறது.

“வாய்மையே வெல்லும்” எனும் தாரக மந்திரம் தெரியாத சிறுவனுக்கு தர்ஷன் தோ கான்ஷயாம் பாடல் எழுதியது யார் என்பது தெரிகிறது.

கேட்டால் யாருக்குமே சந்தேகம் வருவது இயல்பு தான். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் அனில் கபூருக்கும் சந்தேகம் வருகிறது.
தான் மட்டுமே ஜெயித்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சியில் ஒரு சேரிப்பையன் ஜெயித்து விட்டால் அது தனக்கு அவமானம் என உள்ளுக்குள் நினைக்கும் ஒரு ஆணவத் திமிர் அனில் கபூருக்கு. சிறுவனுக்கு தவறான விடையைச் சொல்லிக் கொடுத்து விலக்க முயல்கிறார் ! நாயகனோ மாட்டவில்லை.

அனில் கபூருக்கு சந்தேகம் வலுக்க, கடைசி கேள்வி நாளை நேரடி ஒளிபரப்பு வருவதற்கு முன் காவல் துறையிடம் தள்ளப்படுகிறான் சிறுவன். அங்கே நமது காவல்துறையின் “கண்ணியமான” விசாரணையில் நொறுக்கப்பட்டு, வாயில் இரத்தம் வடிய, கடைசியில் நாயகன் கேள்விகளுக்கான விடை தனக்குத் தெரிந்தது எப்படி என்பதை விளக்குகிறான், வலிக்க வலிக்க.

எந்த ஒரு அதீத சக்தியோ தயாரிப்போ ஏதுமின்றி தனது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளில் அனுபவ வெளிச்சத்தில் விடைகளைச் சொல்லியது காவல் துறைக்குத் தெரிய வருகிறது. அந்த ஒவ்வோர் விளக்கமும், நெஞ்சைப் பிசைந்து, உயிருக்குள் ஈட்டிகளைப் பாய்ச்சுகின்றன.

அதிலும் குறிப்பாக கவலை என்னவென்பதே அறியாத இரண்டு இஸ்லாமிய சேரிச் சிறுவர்கள் மத வெறித்தாக்குதலில் அமைதியான வாழ்க்கையை இழந்து சின்னா பின்னமாகி சிதறுண்டு திகைக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.

அழகான, திறமையான சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினரையும், அவர்களின் உண்மை முகம் தெரியாமல் உற்சாகமாய் பாடிக் காட்டு சிறுவர்களையும் பார்க்கும் போது இனம் புரியாத கவலை மனதை ஆகிரமித்துக் கொள்கிறது.

பெஞ்சமின் பிராங்கிளின் தான் நூறு ரூபாய் நோட்டில் இருக்கிறார் என்பது நாயகனுக்குத் தெரியவரும் காட்சி கல் மனதோரையும் கரைக்கிறது

வெளிநாடுகளில் சென்று படங்கள் எடுத்தே பழக்கப் பட்ட நமக்கு, நமது வீட்டின் கொல்லைப் பகுதி எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம். அதிலும் சேரியில் பிறந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் கொடூர நிஜம் மனதை அறைகிறது. எதிர்த்துப் பேசக் கூட எங்கும் அனுமதியற்ற அவர்களுடைய வாழ்க்கை நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.

நமது நிராகரிப்புகள், மத சகிப்புத் தன்மை இருப்பதால் பீற்றிக் கொள்ளும் நமது நாட்டில் நிகழும் வன் முறை விபரீதங்கள், மனித நேயம் இருக்கிறது என பறை சாற்றிக் கொள்ளும் நமது தெருக்களில் நிலவும் வலி மிகும் நிகழ்வுகள் என காட்சிகள் நம்மைப் பற்றி நமக்கு விளக்குகின்றன.

என் வீட்டுச் சாக்கடையை எப்படி இன்னொருவன் எடுத்து விளம்பரப் படுத்தலாம் எனும் முழக்கங்கள் ஆங்காங்கே எழுவதற்குக் காரணம், தெரிந்தோ தெரியாமலோ இந்த நிலமைக்கு தானும் ஓர் காரணம் எனும் குற்ற உணர்வாய் கூட இருக்கலாம்.

முஸ்லிம் தீவிரவாதியை விஜயகாந்த் சுழற்றிச் சுழற்றி அடிக்கும் போது சிரித்துக் கை தட்டுபவர்கள், ஓர் இஸ்லாமியச் சேரியை சூறையாடும் இந்துத்துவ வெறியைக் கைத்தட்டி வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான்.

எனினும் சிறுவனின் முகத்தை காவலர் ஒருவர் கொடூரமாய் எட்டி உதைக்கும் காட்சியில் “பாருங்கள் இது தான் உண்மையான இந்தியா” என சிறுவன் சொல்ல, வெள்ளைக்கார தம்பதியர் “உண்மையான அமெரிக்காவை உனக்குக் காட்டுகிறேன்” என பணம் கொடுத்து அரவணைப்பது ரொம்பவே மிகைப்படுத்தப்பட்ட செயற்கை.

துரோகம் செய்யும் அண்ணன், தம்பியின் காதலியை அபகரிக்கும் அண்ணன், தாதாவிடம் பணி செய்யும் அண்ணன், கடைசியில் தம்பிக்காய் உயிர் விடும் அண்ணன் என ஒரு சராசரி பலவீனமான காட்சிப் படைப்பாய் வரும் அண்ணன் கதாபாத்திரம் மனதை தொடுகிறது.

சிறுவயதுக் காதல் என்பதெல்லாம் மனதுக்குள் நெருடலாய் இருந்தாலும், எதையும் கற்றுத் தெரியாத சிறுவர்களிடம் துளிர்விடும் ஆத்மார்த்தமான நேசமாய் இதைப் பார்ப்பதில் பிழையொன்றுமில்லை.

இசை ரஹ்மான் என்பதனாலேயே இந்தப் படம் பிரபலமாயிருக்கிறதோ எனும் சந்தேகம் உண்டு. ஆங்கிலம் பேசும் ஒரு இந்தியப் படமாகவே இந்தப் படம் மிளிர்ந்திருக்கிறது. ரஹ்மானின் இசை பிரமாதம் என்றாலும் இதை விட சிறப்பாகவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மனதில் நிற்கும் திரைப்படங்களின் ஒன்று இந்த ஸ்லம்டாக் மில்லியனயர். அதன் முக்கியக் காரணம் நாயகனின் சிறுவயதுக் காட்சிகள்.

Tuesday, February 3, 2009

கட்டுரைகள்

யார்?
நேற்று யதேச்சையாக சமையல் அறையில் நுழைந்த போது அங்குள்ள பொருட்களை நோட்டமிட்டேன். எவ்வளவு சொகுசாக நாம் வீட்டில் சாப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பார்க்கும் போது ஈழ மக்களின் இடம் பெயரும் காட்சி கண்களில் இரத்தம் வரவழைக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து எந்த ஒன்றின் உந்துதலால், இடைவிடாத போராட்டத்தை இவர்கள் நடத்துகிறார்கள். உலகம் முழுதும் தடை, உணவு இல்லை, மருந்து இல்லை. எனினும் இயக்கம் தான் எல்லாம் இறுதி இலட்சியம் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். மனித வெடிகுண்டாய் வெடித்துச் சிதறுகிறார்கள்.

பலர் பிரபாகரனை ஆதரிக்கிறார்கள் அதேபோல் எதிர்ப்பவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். முழுக்க எதிரிகளால் சூழப்பட்ட அந்த மனிதனின் எண்ண ஓட்டம் எண்ணவாக இருக்கும் இந்த கணத்தில். எண்னிப் பார்க்க பார்க்க இரவு தூக்கம் வர நெடு நேரமாகிறது.

மாலையில் பார்க்கில் ஜோடி ஜோடியாக இருப்பவர்களை பார்த்துக் கொண்டே வாக்கிங் சென்றபோது ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதை எறிகணையாய் நெஞ்சில் பாய்கிறது.


ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு

குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு

பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது
இளையவருக்கு விதித்தவன் யாரோ?
Thanks tosathish.oxygen

Wednesday, January 21, 2009

பாரக் ஒபாமா


பாரக் ஒபாமா,
-----------------------------------------------------------------------------------

(வெள்ளை மாளிகையில் என்ற தொடர் கட்டுரையில் - அந்த வெள்ளை மாளிகைக்குள் ஒரு கறுப்பர் நுழையும் காலம் வரும் என்று, (இர்விங் வேலஸ் எழுதிய தி மேன் என்ற நாவலைத் தழுவி) அறிஞர் அண்ணா எழுதியது இன்று 45 ஆண்டுகளுக்குப்பின் காட்சிக்கு வந்துவிட்டது - பாரக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக ஆனதன்மூலம். இதனை இந்தத் தக்க நேரத்தில் பசுமையான நினைவுடன் இக்கட்டுரைமூலம் பதிவு செய்கிறார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.)
----------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஓர் அமைதிப் புரட்சி - சமூகப் புரட்சியின் உருவம் - 44 ஆவது அதிபராக பாரக் ஒபாமா என்ற கறுப்பு மனிதர் (இந்திய நேரம் இரவு 10.35 மணிக்கு) ஜனவரி 20 ஆம் தேதி, அந்நாட்டுத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, கேப்பிட்டல் ஹில் என்ற இடத்தில் பல லட்ச மக்கள் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்!

இதற்குமுன் அடிமைத்தளையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் எப்படி தொடர்வண்டி - ரயிலில் புறப்பட்டு வாஷிங்டன் D.C.-க்கு வந்தாரோ அதுபோலவே பதவியேற்க வந்தார் ஒபாமா!

கறுப்பு மனிதருக்கு மனித உரிமை வெள்ளை நிறத்தவர்போல் வேறுபாடு இன்றி கிடைக்க எனக்கொரு கனவு உண்டு (“I had a dream”) என்ற பிரபலமான உரையை, கறுப்பர்கள் (நீக்ரோ என்ற சொல்லை இப்போது அமெரிக்காவில் எவரும் பயன்படுத்துவதில்லை) ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் (Afro American) என்ற சொற்றொடரையே புழக்கத்திற்குக் கொண்டு வந்து அந்தக் கொச்சை சொல்லான நீக்ரோ என்ற அடிமைச் சொல்லை - படிப்படியாக மாற்றிவிட்டனர் அங்குள்ள கறுப்பினத்து மக்கள். கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பெருமையுடன் பாடும் வண்ணம், கறுப்பர்கள் என்று தங்களது பூர்வ இன அடையாளத்தை இன்றும் மிகப்பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர்!

ஆபிரகாம் லிங்கன் பாதையில்!

அடிமைத்தனத்தை ஒழித்து, கறுப்பின மக்களான ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பைப் பிரகடனப்படுத்தியவர் - உழைப்பால் உயர்ந்த மாமேதை, 19 முறை பல தோல்விகளை வாழ்க்கையில் கண்டும் சலியாது களத்தில் நின்று வென்ற ஜனநாயகத்தின் குரலாகத் திகழ்ந்த ஆபிரகாம் லிங்கனை, அவர் வெள்ளையர் என்ற போதிலும், வெள்ளை ஆதிக்கம் ஏற்கவில்லை; அதனால் அவர் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜான்வீல்கீஸ் பூத் என்ற நிற வெறியன் அவரை நாடகக் கொட்டகையிலேயே சுட்டு வீழ்த்தினான்.

ஆபிரகாம் லிங்கனின் சொந்தப் பகுதியான ஸ்பிரிங் பீஃல்ட் என்ற இடத்தில் உள்ள அவரது நினைவுக் கூடத்தில் அந்த ரத்தம் தோய்ந்த உடைகள் இன்னும் காட்சிக்கு வைத்துள்ளனர். வரலாற்றுச் சுவடுகள் மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டே இருக்க, அவர் மறையவில்லை என்பதை உணர்த்திட இந்த ஏற்பாடாகும்!

அந்த மனிதரைப்போலவே, வெள்ளை என்றோ, கறுப்பு என்றோ பேதமில்லாப் பெருவாழ்வு, புதுவாழ்வு கொண்ட அமெரிக்காவை தொலைநோக்கோடு கனவு கண்டு, அறப்போர்களை நடத்திய மார்ட்டின் லூதர்கிங் (ஜூனியர்) வெள்ளை நிற வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

அவர்கள் சிந்திய இரத்தத் துளிகள் மீண்டும் உயிர்ப் பெற்று எழுந்துள்ளன!

அன்று சிந்திய ரத்தம்

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை பகுத்தறிவாளர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால், மேலே காட்டியவர்கள் சிந்திய இரத்தம் அமெரிக்க வரலாற்றின் கறைகளைக் கழுவிடக் கூடிய மாமருந்து - அதைப் போக்கும் மருந்து என ஆகியுள்ளது என்பதை எந்த வரலாறுதான் பதிவு செய்ய மறுக்கும்?

பாரக் ஒபாமா 48 வயது இளைஞர்; இளமை முறுக்கோடு, புதிய உத்வேகத்துடனும், அணுகுமுறையோடும், ஜனநாயகக் கட்சிக்கே தனிப் பெருமை யூட்டும் வண்ணம் பெரும் வெற்றியை குவித்ததோடு, அவரை எதிர்த்தவர்களிடம் கைகுலுக்கி அவர்களையும் கட்சி, மத, பேத உணர்வின்றி குதூகலத்துடன் கலந்து ஆலோசித்த பாங்கு, இங்குள்ள கட்சித் தலைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய ஜனநாயகப் பாடமாகும்.

வெள்ளை மாளிகை!

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டம் இது! தந்தை பெரியாரையே தன் வாழ்நாளில் கண்ட கொண்ட ஒரே தலைவர் என்று வர்ணித்த தலைமைச் சீடரும் தலைமகனுமாக அண்ணா, அவர்தம் தலைவர் பெரியார் எப்படி இனிவரும் உலகம்பற்றி கணித்தார்களோ - அதுபோலவே, அவர் படித்த ஓர் ஆங்கில புதினம் ஒன்றை முன்னிறுத்தி, அந்தப் புதின இலக்கிய கர்த்தாவின் சிந்தனைகள் தமிழ்நாட்டில் சிறகடித்து ஒரு நாள் வரும்; அந்நாளில் ஒரு கறுப்பு மனிதர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியேறுவார்; அப்போது அதை விரும்பாத வெள்ளை ஆதிக்க அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் சூதும் சூழ்ச்சியும் செய்து, அவர் மீது பழி சுமத்தி, அவமானங்களைச் சுமக்கச் செய்வார்கள் என்று சுட்டிக்காட்டி, பிறகு அவரைக் காப்பாற்ற நல்ல உள்ளங்களும் உதவிக்கு வரும் என்ற காலத்தைக் கடந்த முன்னோட்ட கற்பனையை வைத்த தி மேன் (“The Man”) என்ற நாவலை பிரபல அமெரிக்க எழுத்தாளர் இர்விங் வேலஸ் (Irving Wallace) என்பவர் 1963 இல் எழுதி, 1964 இல் வெளியிட்டதை விளக்கி அமெரிக்க சமுதாயத்தின் நிலையை அதில் முன்னிறுத்தி வெள்ளை மாளிகையில் என்ற தலைப்பில் ஓர் அருமையான தொடர் கட்டுரையை தனது வார ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதி, அது பிறகு நூலாக வெளிவந்து பல பதிப்புகள் வந்துவிட்டன!

சுமார் 45 ஆண்டுகளுக்குமுன் அவ்வெழுத்தாளர் கண்ட கனவின் அடிப்படையில் விளைந்த கற்பனைப் பாத்திரம் இன்று கண் முன்னால் - தேர்தல் மூலமே வெற்றி பெற்று பதவியேற்கும் மாமனிதராக கறுப்பு ஒபாமா காட்சியளிக்கிறார்! இர்விங் வேலஸ் (Irving Wallace) எழுதியது கற்பனை வளம் - புராணக்கதை அல்ல; மதவாதிகளின் அற்புத அதிசய ஜாலங்கள் அல்ல; சமூக விஞ்ஞானத்தின் சரியான கணக்கீடு; வருங்காலம் எப்படி வரும் என்ற வளமான சிந்தனை பெற்றெடுத்த ஓர் அற்புதக் குழந்தை!

அதனைக் கண்டு அதை தமிழ் உலகிற்குத் தர முயன்ற அறிஞர் அண்ணாவின் பேராற்றல் எழுத்துகளில் ஆங்கிலத்தைவிட அதிகமான ஈர்ப்பு அண்ணாவிற்கே உரிய தனி நடையாகும்.

மேற்கும் கிழக்கும் இணைந்து சிந்தித்து, எழுத்துகளை கருத்தாக்கப் படைப்புகளாக்கி, அதனை இன்று காட்சிகளாகவே - இவை கற்பனை அல்ல. களம் காண்பிக்கும் வெற்றியின் நிஜ உருவம்; நிறங்களோ, மதங்களோ, வருங்காலத்தில் நிற்காது; மனிதம்தான் நிற்கும் என்ற அரிய உண்மையை அவ்விரு நூல்கள் கூறின. அன்று அவர்கள் சிந்தித்தனர்!

இன்று நாம் கண்கூடாகக் கண்டு சுவைக்கிறோம்!

அண்ணாவின் கனவு நனவாயிற்று!

என்னே அவர்களது தொலைநோக்குப் பார்வை! பகுத்தறிவுப் பார்வையுடன் மனிதனது எதிர்காலம்பற்றி கணக்குப் போட்டால் அது தப்பாது; அது வெறும் ஜோசியக் கணக்கல்ல; ஆலமரத்து ஆரூடம் அல்ல; அப்பட்டமான சமூக விஞ்ஞான சரித்திரம் காணப் போகும் திருப்பம்பற்றிய சிந்தனைத் தொகுப்புகள் என்பதாகும்!

இர்விங் வேலஸ் நாவலைப்பற்றி வெள்ளை மாளிகையில் என்ற நூலில் அண்ணா எழுதுகிறார்:

அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு வெள்ளை மாளிகை என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக் கூடாதா?

மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச் சொல்வது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண (தம்பிக்கு எழுதிய மடல் என்பதால் இச்சொல்லாட்சி) அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலேகூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கறுப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.

வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதர் என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; மனிதன் என்பதே தலைப்பு!

நிறம், வடிவம், நாடு, மதம், மொழி இவை எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்ந்திடவேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டிற்கு (நூலுக்கு) மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.

அந்த மனிதனைக் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்!

என்ற முகவுரையுடன் அண்ணா அக்கடிதங்களை எழுதினார் அப்போது!

வெள்ளை மாளிகைக்கே சென்றார்

இர்விங் வேலஸ் நூல் முதலில் வெளியானது 1964 வாக்கில்! இதற்காகவே இந்நூலாசிரியர் அந்நாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் விருந்தினராகச் சென்று வெள்ளை மாளிகையை (நூல் எழுதுமுன்) எது? எங்கே? எப்படி? என்று ஆய்வு செய்து எழுதி முடித்தார்.

சில நாள்கள் தங்கினார்! இந்நூலை அவர் முடித்து 3 வாரங்கள் கழித்து டல்லஸ் நகரில் - ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்! அந்த மர்ம முடிச்சு இன்னமும்கூட அவிழ்க்கப்படவில்லை.

அப்புதினத்தின் கதாநாயகன் - டக்ளஸ் டில்மென்.

அமெரிக்காவின் அதிபர், துணை அதிபர், நாடாளுமன்றத் தலைவர் ஆகிய முப்பெரும் பதவிகளில் இருந்து வந்தவர்கள் எதிர்பாராத வண்ணம் சங்கிலித் தொடர்போல இறந்துவிட்டதால் இந்த செனட் சபையின் தலைவராக தகுதியில் உயர்ந்த கறுப்பர்! நல்லவர் - வல்லவர். ஒபாமாவைப்போல வழக்கறிஞர் டக்ளஸ் டில்மென்; புகழும், பொருளும் ஈட்டிக் கொண்டவர்தான்.

மரபுப்படி அவர் இந்த திடீர் ஏற்றத்திற்கு உயர்த்தப்படுகிறார் - பல வெள்ளைக்காரர்களின் வெறுப்பு அலைகளுக்கிடையே!

பைபிள்! ஆம்! வெள்ளையருக்கு ஒன்று, கரு நிறத்தவருக்கு வேறு ஒன்றா இருக்கிறது? இல்லையே! இரு நிறத்தவருக்கும் ஒரே பைபிள்.

மரபின்படி, உயர்நீதிமன்ற நீதிபதி வருகிறார் பதவிப் பிரமாணம் செய்து வைக்க!

கட்டினவனே காத்திடுவான்

அமைத்தவனே பாதுகாப்பான்

அவன் துணையின்றி பாதுகாவலன்

எதையும் பாதுகாத்திட முடியாது

என்ற கருத்து கொண்ட மணிமொழியுள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனையே தனது பிரார்த்தனையாகப் படிக்கிறார் டில்மென்!

ஆனாலும், ஆயிரமாயிரம் சோதனைகளும், வேதனைகளும், வீண் அபவாதங்களும், பழிகளும்!

இறுதியில் மனிதம் வெல்கிறது - கதையில்!

2009 ஜனவரி 20 இல் உலகம் அந்த இருபெரும் சிந்தனையாளர்களான - இலக்கிய மேதைகளின் கனவுகள் - உண்மைக் காட்சிகளாவதைக் கண்டு களிக்கிறது! மகிழ்ச்சியில் மிதக்கிறது!!

சமூகநீதிக் கொடி எங்கும் பறக்கும்

இன்னமும் ஜாதி வெறி கொண்டு, மதவெறி கொண்டு அலையும் மனிதர்களே, வரலாறு மாறும்; எங்களுக்கும் காலம் வரும் என்று நிரூபிக்கும்!

எங்கும் சமூகநீதிக் கொடி பறக்கும். தந்தை பெரியார் நூற்றாண்டு - மானுடத்தைப் போற்றும் சுயமரியாதைக் கதிர் ஒளிகள் பாயாத இடமே இல்லை; அப்போது சாயாத சனாதனமே இல்லை என்றே சரித்திraம் இங்கும் முழங்கும். எனவே, பரம்பரை யுத்தக் கொக்கரிப்புகள் வேண்டாம்! பதிலடி பளார் என இங்கும் மீண்டும் கிடைக்கும்!


-------------------கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

Wednesday, January 14, 2009

நல்வாழ்த்துக்கள்!


அனைவரும் என்னுடைய பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Wednesday, December 31, 2008

wishes